புதன், ஜனவரி 13, 2010

10 பேர் பலியான வேதாரண்யம் மெட்ரிக் பள்ளி வேன் விபத்து உண்மை அறியும் குழு அறிக்கை.













10 பேர் பலியான வேதாரண்யம் மெட்ரிக் பள்ளி வேன் விபத்து உண்மை அறியும் குழு அறிக்கை.

தொடர்புக்கு : மு. சிவகுருநாதன், 2/396 B கூட்டுறவு நகர், விளமல் - 613 701, திருவாரூர் மாவட்டம். செல் : 8122810010, 9842402010.

டிசம்பர் 03, 2009 நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கரியாப்பட்டினம், கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி வேன் கத்தரிப்புலம் பனையடி குத்தகை குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளிக் குழந்தைகள் 9 பேரும், ஆசிரியை ஒருவரும் பலியானார்கள். இந்நிகழ்வு பற்றிய உண்மை நிலவரங்களை கண்டறிய.

மு. சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR) திருவாரூர்.
த. மனோகரன், மனித உரிமை ஆர்வலர்
ச. இராஜேந்திரன், மனித உரிமை ஆர்வலர்
ஆகியோர்,

அடங்கிய மூவர் குழு டிசம்பர் 06,2009 அன்று விபத்து நடந்த இடம், கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி, விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், உயிர் பிழைத்த குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், உயிரிழந்த பள்ளி ஆசிரியை சுகந்தியின் பெற்றோர், விபத்தை நேரில் பார்த்தவர்கள், மீட்புப் பணியில்
ஈடுபட்டோர் ஊர்பொதுமக்கள்போன்றோரைசந்தித்துஉரையாடியது.

எமது பார்வைகள்
:

01. குழந்தைகளை இழந்த பெற்றோர்களும், உறவினர்களும் இழப்பின் சோகத்தில் ஆட்பட்டு பேசவே இயல முடியாதவர்களாக உள்ளனர். வேன் உரிமையாளர் வீட்டின் எதிரே உள்ள பலியான ஹரிஹரனின் தந்தை குமார் மற்றும் உறவினர் சாலையில் ஓலமிட, வேன் உரிமையாளர் வீட்டை காவல் காக்கும் இரு காவலர்கள் “போலீஸ் வண்டி கொண்டு வந்து அனைவரையும் அள்ளிக்கொண்டு செல்வோம்” என்று மிரட்ட அவர்களது அழுகை, ஒப்பாரி இன்னும் அதிகமானது. காவலர்களின் இந்த மனிதாபிமானமற்ற செயல்பாட்டை எங்கள் குழு நேரில் கண்டது. சொற்ப இழப்பீடு, மேல் நடவடிக்கை இன்மை, அதிகாரிகளின் பொறுப்பற்ற போக்கு போன்றவற்றால் அம்மக்களின் வேதனை கூடிக் கொண்டே போகிறது. விபத்தில் இறந்த ஜெயசூர்யா, இளஞ்சூர்யா ஆகிய இரண்டு குழந்தைகளின் பாட்டி டிசம்பர் 07, 2009 விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

02. விபத்து நடந்த இடம் பனையடிகுத்தகை செம்மண் சாலை வேன் செல்லும் அளவிற்கு அகலமாகவே உள்ளது. அந்த இடத்தில் வளைவும் இல்லை; நேரான சாலையாகவே உள்ளது. வேன் டிரைவரின் கவனக் குறைவு, செல்போன் பேச்சு, வேனின் மோசமான நிலைமை, பிரேக் பிடித்தாலும் நிற்க வாய்ப்பில்லாத பட்டன் இல்லாத டயர் போன்ற காரணத்தால் தான் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பள்ளியிலிருந்து விபத்து நடந்த இடம் 12 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த வேன் விபத்து நடக்கும் போது 20 குழந்தைகளுடன் இருந்திருக்கிறது. பள்ளியைச் சென்று அடையும் போது 75க்கு மேற்பட்ட குழந்தைகளுடன் செல்லும். அந்த மாதிரியான சூழலில் பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.

03. வேன் டிரைவர் மகேந்திரன், உதவியாளர் சுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்திருப்பதாக சொல்லும் காவல்துறை பள்ளியின் தாளாளர் எஸ். தங்கராசன், வேன் உரிமையாளர் கார்த்திகேயன் போன்றோர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. தாளாளர் தம் வசம் இருந்த மோசமான இந்த வேனை விற்பனை செய்து, அதே வேனை பள்ளிக்கு இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார். குழந்தைகளின் உயிர் குறித்து பள்ளி நிர்வாகமும், வேன் உரிமையாளரும் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. அரசுப்பள்ளியில் ஆசிரியராக உள்ள கார்த்திகேயன் சுமத்ரா என்ற தமது உறவினர் பெயரில் வேனை சொந்த உபயோகத்திற்கென பதிவு செய்து சட்டத்தை மீறி பள்ளிக்கு இயக்கி வந்துள்ளார்.

04. கலைவாணி மகா மெட்ரிக் பள்ளிக்கு 01.06.2009 முதல் அங்கீகாரம் இல்லை. அங்கீகாரத்தை புதுப்பிக்க கருத்துருக்கள் அனுப்பப்படவில்லை. வேன் பள்ளி மாணவர்களுக்கான உரிமம் பெறவில்லை. ஓட்டுநருக்கு உரிமம் இல்லை. வேன் இயக்கக் கூடிய நிலையில் இல்லை. இதுபோன்ற நிறைய ‘இல்லை’ களை மாவட்ட நிர்வாகம் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் ‘கண்டுபிடித்துச்’ சொல்லி வருகிறது. இதற்குக் காரணமாக எவர் மீதும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 10 உயிர்கள் மாண்ட நிலையில் எந்தப் புகாரும் தரப்படவில்லை என்று காவல்துறை தரப்பு சொன்ன காரணத்தால் 05.12.2009 அன்று பாதிக்கப்பட்ட பெற்றோர் கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுவரையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படவில்லை. 05. நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. இரா. வீராசாமி அவர்களின் உத்தரவு (ந.க.எண். 11424/அ2/2009 நாள் : 04.12.2009) பள்ளியின் வாசலில் ஒட்டப்பட்டுள்ளது. தேவி மழலையர் பள்ளியின் அங்கீகாரம் 31.05.2009ல் முடிவடைந்துள்ளது. 01.06.2009 முதல் அங்கீகாரம் புதுப்பிக்க தஞ்சாவூர் மெட்ரிக் பள்ளி ஆய்வாளருக்கு உரிய கருத்துருக்கள் அனுப்பப்படவில்லை. விபத்து நடந்து விட்டதால் இப்பள்ளி மாணவர்களுக்கு மாற்றுச் சான்று அளித்து வேறு பள்ளியில் சேர்க்க தாளாருக்கும், கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத பள்ளிக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் உண்டா? இப்பள்ளி கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 01.06.2009 முதல் அங்கீகாரம் இல்லாது செயல்பட்டது, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (நர்சரி) நாகை, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், தஞ்சை ஆகியோர் ஏன் பார்வையிட்டு கண்டுபிடிக்க முடியவில்லை? 10 உயிர்களை காவு கொடுத்தபிறகுதான்கண்டுபிடிக்கமுடிந்திருக்கிறது.

06. தாளாளர் எஸ். தங்கராசனின் பெரிய மாடி வீட்டு சந்துப் பகுதியில் மாட்டுத் தொழுவம் போன்று, பல நாடுகளில் தடை செய்யப்பட்ட சுற்றுச் சூழலுக்கும், உடலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய ‘ஆஸ்பெட்டாஸ்’ கூரை வேயப்பட்ட, மிகவும் பள்ளமான, மழை நீர் தேங்கி நிற்கக் கூடிய இடத்தில் இந்த மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இங்கு பயின்ற 460க்கு மேற்பட்ட மாணவர்களுக்குப் போதுமான இட வசதியோ, கழிப்பறை வசதியோ இல்லை. ஒப்பீட்டளவில் இப்பள்ளியை விட, நாகக்குடையான் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி போன்றவை வசதி மிக்கவை. பல்லாயிரக்கணக்கில் சேர்க்கைக் கட்டணமும், ரூ.500/- முதல் ரூ.1000/- வரையிலான மாதக் கட்டணமும் செலுத்திய பெற்றோர்களும் இந்த வசதிக் குறைவைப் பொருட்படுத்தவே இல்லை. விபத்தில் உயிரிழந்த இரண்டாம் வகுப்பு அஜய்-ன் புத்தகப்பையை பாட்டி காய வைத்து அழுது புலம்பிக் கொண்டிருந்தார். காப்பி நோட்டில் அஜய் கையெழுத்தின் முதல்வரி “கொடுமையை எதிர்த்து நில்”.

07. இறந்த குழந்தைகள் 3 வயது முதல் 10 வயதுக்குட்பட்ட பிஞ்சுகள். இந்த வயதில் 15, 20 கி.மீ தூரமும், அதற்கு மேலும் பயணம் செய்து தினமும் பள்ளியை அடைகிறார்கள். அவர்கள் காலை, மாலை இரு வேளையும், வாகனங்களில் இருக்கும் நேரம் சராசரியாக 3 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. காலை 7.30 க்கே கிளம்பி காலை, மதிய உணவுகளை சரியாக சாப்பிட முடியாத நிலையில், பல ஊர்களைச் சுற்றிக் கொண்டு 9 மணிக்கு அக்குழந்தைகள் பள்ளியை அடைய வேண்டியிருக்கும். ஆங்கில மோகத்தால், விளையாடித் திரிய வேண்டிய பிஞ்சு வயதில் புத்தகப் பொதி சுமந்து சிறைச்சாலை போன்ற கொடிய வதை முகாம்களான மெட்ரிக் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவலத்திற்கு பெற்றோர்களும் ஒரு காரணம்.

08. அரசின் கல்விக் கொள்கை தனியார் கல்வி முதலாளிகள் பெருக வாய்ப்பளிக்கிறது. ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ (SSA) தொடங்கப் பட்டதிலிருந்து புத்தகங்கள் இல்லை, அட்டை என்றவுடன் பல பெற்றோர்கள் அரசுப் பள்ளியிலிருந்து மெட்ரிக் பள்ளிக்கு குழந்தைகளை மாற்றத் தொடங்கி விட்டனர். பெயரில் மட்டும் இருக்கின்ற இயக்கம் ‘மக்கள் இயக்கமாக’ வளர்த்தெடுக்கப் படவில்லை. இது பற்றிய பரப்புரைகள் மக்களிடம் செய்யவில்லை. சமச்சீர் கல்வி என்கிற போதும் இந்நிலை அடுத்த ஆண்டும் தொடரவே செய்யும். பாடம் ஒன்றாக இருப்பினும் பயிற்று மொழி ஆங்கில வழிக்கு மட்டுமே வரவேற்பு இருக்கும்.

09. இப்பள்ளியின் தாளாளர் எஸ். தங்கராசன் அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருந்து கொண்டு மெட்ரிக் பள்ளியை நடத்தி வந்திருக்கிறார். இவர் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வாங்கியவர்; அரிமா சங்கத்திலும் உள்ளார். இவரின் சகோதரர் எஸ். சிவப்பிரகாசம் (காங்கிரஸ்) வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவராக உள்ளார். பினாமிகள் பெயரிலும், அரசியல் பின்புலத்தின் அடிப்படையிலும் இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தாளாளர் தற்போது ஓய்வு பெற்று விட்டாலும் அரசுப் பணியில் உள்ள அவரது மகன் செல்லப்பாவும், இப்பள்ளிப் பணிகளில் ஈடுபடுகிறார். செல்லப்பா இளம் அரிமா சங்கத்தில் உள்ளார். விருது, பதவி, பட்டங்களை சுமந்து கொண்டு, சட்டங்களை மீறியும் வளைத்தும் இவர்கள் 10 பேர் உயிரிழப்புக்குக் காரணமான குற்றச் செயல் புரிந்துள்ளனர்.

10. டிசம்பர் 02, 2009 நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது. அடுத்த நாள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் அன்று விடுமுறை அளித்திருக்கலாம். விபத்துக்கு முன்பும், பின்பும் நாகை, மாவட்ட ஆட்சியர் சரிவர செயல்படவில்லை என்பது பொது மக்களின் கருத்தாக உள்ளது.

பரிந்துரைகள்

01. இறந்த குழந்தைகளுக்கு தலா ரூ.50,000/-ம், ஆசிரியைக்கு ரூ.1,00,000/-ம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது போதாது. எனவே, இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா 3 இலட்சமும், ஆசிரியையின் குடும்பத்திற்கு 5 இலட்சமும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். 10 குடும்பங்களிலும் யாரேனும் ஒருவருக்கு கருணை அடிப்படையில்அரசுவேலைவழங்கவேண்டும்.

02. விபத்தில் குழந்தைகளைக் காப்பாற்றி தன்னுயிரை நீத்த ஆசிரியை செல்வி மா. சுகந்திக்கு வீர - தீரச் செயல் புரிந்தமைக்கான தமிழக அரசு விருது வழங்கப்பட வேண்டும். அவரது பெயரை மத்திய அரசின் குடியரசுத் தலைவர் பதக்கத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

03. பலியான குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகள் ஆகியோர் அதிர்ச்சி, துயரம், வலி போன்றவற்றிலிருந்து முழுமையாக விடுதலை பெற கவுன்சிலிங் போன்ற உளவியல் கிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும்.

04. இப்பள்ளிக் குழந்தைகளை, பெற்றோருடன் கலந்தாய்வு செய்து அருகேயுள்ள இதரப் பள்ளிகளில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும். இக்குழந்தைகளைச் சேர்க்கும் பள்ளிகளில் கூடுதல் மாணவர்களுக்குத் தேவைப்படும் ஆசிரியர் பணியிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்.

05. வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அதைப்போல இப்பள்ளியின் தாளாளர் எஸ். தங்கராசன், வேன் உரிமையாளர் கார்த்திகேயன் போன்றோரையும் கைது செய்து தகுந்த பிரிவுகளின் படி குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

06. வேன் தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, குற்றமிழைத்த வட்டார போக்குவரத்து அலுவலர், ஆய்வாளர்கள் போன்றோர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

07. மெட்ரிக் பள்ளியை முறையாக ஆய்வு செய்து இந்த மாதிரியான விபத்துக்களைத் தடுக்கத் தவறிய கல்வித்துறை மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்ந்த தொடர்புடைய அனைத்து அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

08. அரசுப்பணி செய்பவர்களோ, அவரது பினாமிகளோ இந்த மாதிரியான மோசடி வேலைகளில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்பள்ளி செயல்பட அனுமதிக்கக் கூடாது.

09. சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதோடு மட்டுமல்லாது எதிர்காலத்தில் இது போன்ற இழப்புகள் நிகழா வண்ணம் தடுக்க தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளை அரசே ஏற்று நடத்துதல் போன்ற தொலை நோக்குத் திட்டங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

kanneer vittu azhathaan mudigirathu
akkarai atra arasangathai ninaithu

செ.சரவணக்குமார் சொன்னது…

கடந்த ஆண்டு டிசம்பரில் வேதாரண்யம் அருகே உள்ள கலைவாணி மெட்ரிக் பள்ளி வாகனம் குளத்தில் கவிழ்ந்து பள்ளிக்குழந்தைகள் 9 பேரும் ஆசிரியை சுகந்தி அவர்களும் மரணமடைந்த துயரத்தையும் மறந்துவிடமுடியுமா? ஆசிரியை சுகந்தி தனது உயிரையும் பொருட்படுத்தாது 11 குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறார். கும்பகோணம் விபத்தை அடுத்து ஆட்சியாளர்கள் சிறார் பள்ளிகளின் நலனில் கொஞ்சமேனும் கவனம் செலுத்தியிருந்தால் இதுபோன்ற அவலம் நிகழ்ந்திருக்குமா? வேதாரண்யம் பள்ளி விபத்து பற்றி விசாரணை நடத்தி ஆய்வறிக்கை சமர்ப்பிக்க ‌மனித உரிமை ஆர்வலர்களான திரு. மு.சிவகுருநாதன், திரு. த.மனோகரன், திரு ச.ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது நடந்த சம்பவங்களும், குழுவின் ஆய்வறிக்கையையும் இந்த இடுகையில் சென்று வாசியுங்கள். அதிர்ந்து போகும் அளவிற்கு இருக்கின்றன உண்மைகள். சிவகுருநாதன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

என்ன செய்து நமது ஆற்றாமையைப் போக்கிக்கொள்ள முடியும். இது போல ஒரு பதிவு எழுதுவதைத் தவிர.

கருத்துரையிடுக